Published : 12 Mar 2024 06:09 AM
Last Updated : 12 Mar 2024 06:09 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கைதி பேச்சிதுரை (23), மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
வீரவநல்லூர் காவல் நிலையசரகத்துக்கு உட்பட்ட, வெள்ளாங்குழியில் இருந்து கல்லிடைக்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையில் புதியபாலம் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.
தொழிலாளி கொலை: அங்கு விருதுநகர் மாவட்டம் உதயநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி(42) மற்றும் சிலர் கடந்த 7-ம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தனர். அன்று மாலையில் அங்கு இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த, வீரவநல்லூர் அருகே உள்ள தென்திருபுவனத்தை சேர்ந்த பேச்சிதுரை (23), அவரது நண்பர் கல்லிடைக்குறிச்சி புதுஅம்மன் கோயில் தெரு சந்துரு (23)ஆகியோர், பாலம் கட்டுமானப்பணியில் இருந்த தொழிலாளர்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி, ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது கருப்பசாமி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து சென்றபேச்சிதுரை, சந்துரு ஆகியோர், திருப்புடைமருதூர் சாலையோரம்செல்போனில் பேசிக்கொண்டிருந்த வெங்கடேஷ் (26) என்பவரைஅரிவாளால் வெட்டியதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
மேலும், ஒரு காரை வழிமறித்து தகராறு செய்து, காரின் இருபக்ககண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். பின்னர், திருப்புடைமருதூர் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து, அரிவாளை காட்டி மிரட்டிஓட்டுநரை தாக்க முற்பட்டனர். பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
தொடர்ந்து ஸ்ரீபத்மநல்லுர் பகுதியில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த வீரவநல்லூர் போலீஸார், இருவரையும் கைது செய்யமுற்பட்டனர். அப்போது, தலைமைக் காவலர் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் தப்பினர். காயமடைந்த செந்தில்குமார், திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தப்பியோடிய பேச்சிதுரை, சந்துரு ஆகியோர் அங்குள்ள ஆற்றுப்பாலத்தின் அடியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. போலீஸார் மற்றும் தனிப்படையினர் அங்கு சென்று, அவர்களை சுற்றிவளைத்தனர்.
அப்போது இருவரும் தப்பியோட முயன்றபோது, துப்பாக்கியால் சுட்டு பேச்சிதுரையைப்பிடித்தனர். தப்பியோடிய சந்துருவும் பின்னர் பிடிபட்டார். இருவரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு வழக்குகள்... இந்த சம்பவங்கள் தொடர்பாக, பேச்சிதுரை, சந்துரு ஆகியோர் மீது வீரவநல்லூர் போலீஸார் 4 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். மேலும், இவர்கள் மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி மற்றும் போதைப் பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பேச்சிதுரை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT