Published : 07 Mar 2024 06:09 AM
Last Updated : 07 Mar 2024 06:09 AM

ராஜஸ்தான் பணியாளர் போட்டித் தேர்வில் முறைகேடு: முதல் மதிப்பெண் பெற்றவர் உட்பட 14 பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்கள் கைது

கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2021-ம் ஆண்டு செப். 13 முதல் 15-ம் தேதி வரை காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு நடைபெற்றது. 859 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை 3.83 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்வானவர்கள் பணியில் சேர்ந்து, ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீர் நகரங்களில் உள்ள காவல் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதனிடையே, தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக புகார்எழுந்தது. இதன்மூலம் 300 முதல் 400 பேர் வரை முறைகேடாக பணியில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ராஜஸ்தான் காவல் துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் வி.கே. சிங் நேற்று கூறியதாவது:

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக எஸ்ஓஜி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு மூலம் பணியில் சேர்ந்த 14 பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்களை கைது செய்துள்ளனர். இதில் முதல் மதிப்பெண் பெற்ற நரேஷ் பிஷ்னோயும் அடங்குவார். இவர் உட்பட பெரும்பாலானவர்கள் சஞ்சூர் நகரைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்கள் ஜோத்பூர், பார்மர் மற்றும் சுரு நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் ராஜேந்திர யாதவ் மற்றும் அசோக் நதாவத் ஆகிய இருவரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இப்பதவிக்கு தேர்வானபோதும் அவர்கள் இன்னும் பணியில் சேரவில்லை. வேறு ஒரு வழக்கில் அவர்கள் இருவரும் ஏற்கெனவே சிறையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா (பாஜக) எக்ஸ் சமூகவலைதளத்தில், “மோடியின் உத்தரவாதம் என்பது உத்தரவாதம் நிறைவேற்றப்படும் என்பதற்கான உத்தரவாதம் ஆகும். புதிய இந்தியாவின் புதிய ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவை கட்டுப்படுத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வெற்றி கிடைத்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x