Published : 07 Mar 2024 05:28 AM
Last Updated : 07 Mar 2024 05:28 AM

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது

திருவண்ணாமலை: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நல அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் அடுத்த கருங்காலிப்பாடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன்- ஜெயா தம்பதி. இவர்களுக்கு சிந்தனை என்ற 4 வயது மகளும், கிருத்திகா என்ற இரண்டரை வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், அரசின் நிதியுதவி கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இ-சேவை மையம் மூலம் இவர்கள் விண்ணப்பித்தனர்.

இதற்கிடையில், ஜெயா அளித்த மனுவை ஆய்வு செய்த சமூக நல அலுவலர் ஜீவா, ரூ.5 ஆயிரம் லஞ்சம் தருமாறு தம்பதியிடம் கேட்டுள்ளார். தாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்றுதம்பதி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரூ.3 ஆயிரமாவது தர வேண்டுமென ஜீவா கூறியுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயா, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர், போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை நேற்று காலை செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சமூக நல அலுவலர் ஜீவாவிடம் கொடுத்துள்ளனர். அப்போது டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ஜீவாவைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x