Published : 07 Mar 2024 06:06 AM
Last Updated : 07 Mar 2024 06:06 AM

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி படுகொலை: கஞ்சா போதையில் படுபாதக செயலில் ஈடுபட்ட இளைஞர் உள்ளிட்ட 2 பேர் கைது

கருணாஸ், விவேகானந்தன்

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 2-வது நாளாக நகரெங்கும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 9 வயது மகள் கொலைசெய்யப்பட்டு, கழிவுநீர்க் கால்வாயில் சாக்கு மூட்டையில் வீசப்பட்டிருந்தாள். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று முன்தினம் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(56) ஆகியோரை நேற்று கைது செய்தனர். வீட்டின்முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ளவிவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரும், விவேகானந்தனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதில் மூச்சுத் திணறி மயங்கி விழுந்த சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டி, உடலை வேட்டியில் மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்ன மணிக்கூண்டு அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் இசிஆர் சிவாஜி சிலைஅருகில் இருந்து பேரணியாகப் புறப்பட்டுச் சென்று, முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சில இளைஞர்கள் பேருந்துகளின் மீது ஏறி கோஷமிட்டனர். போலீஸார் லேசான தடியடி நடத்தி, அவர்களைக் கலைத்தனர்.

புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடற்கரை சாலை நேரு சிலை அருகே சிறு வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர். இதேபோல, பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை உடலைவாங்க மாட்டோம் எனத் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த முதல்வர், ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இதனிடையே கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆளுநர் முற்றுகை: சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று மாலை அவரது வீட்டுக்கு ஆளுநர் தமிழிசை வந்தபோது, அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள், ‘ஆளுநரே வெளியேறு, குற்றவாளிகளை சுட்டுப் பிடி’ என்று கோஷமெழுப்பினர். சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு அங்கிருந்து கிளம்ப முயன்ற ஆளுநரை சில பெண்கள் முற்றுகையிட்டனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் ஆளுநரை மீட்டு, அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர், "நான் நிலைக்குலைந்து போயுள்ளேன். இங்குள்ள பெண்களின் உணர்வுதான் எனக்கும் இருக்கிறது. நான் இதை அரசியலாகப் பார்க்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து, ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க வழி செய்வேன். போதைப் பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

தலைவர்கள் கண்டனம்: பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சிறுமி கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதுடன், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்திஉள்ளனர்.

போதையில் நடந்த கொடூரம்: இந்த கொடூர சம்பவம் போதையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட தரப்பினரும், மறியலில் ஈடுபட்ட மக்களும் குறிப்பிட்டு வருகின்றனர். பிடிபட்ட குற்றவாளிகளிடம் முதல்கட்டமாக விசாரணை நடத்திய காவல் துறையினரும் இதை உறுதி செய்துள்ளனர்.

பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் புதுச்சேரி, தமிழகத்தில் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுளளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பிடித்துள்ளோம். கஞ்சா நடமாட்டம் இருப்பது தெரியவந்தால், சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் முன்வந்து காவல் துறைக்குப் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்போரின் விவரம் ரகசியம் காக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x