Published : 03 Mar 2024 04:02 AM
Last Updated : 03 Mar 2024 04:02 AM
சென்னை: சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வினி என்பவர், கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அழகேசன் என்பவர் அஸ்வினியை காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீஸார் வழக்கு பதிந்து அழகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அழகேசன், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி வாசலில் அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அழகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு, சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது ஃபாரூக் முன்பு நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதிக்கப்படுகிறது. அஸ்வினியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர சட்டப் பணிகள் ஆணையக் குழுவுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது’’ என தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT