Published : 02 Mar 2024 01:27 PM
Last Updated : 02 Mar 2024 01:27 PM
கும்பகோணம்: கும்பகோணத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி காரில் இருந்த ரூ. 17 லட்சம் பணம் திருடிய சம்பவத்தில் பிரபல கொள்ளையன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன் மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்கள் அனைவரையும் நேற்று (1-ம்) தேதி சிறையிலடைத்தனர்.
திருவிடைமருதூர் வட்டம், கோவிந்தபுரம், விட்டல்தாஸ் சமஸ்தானத்தில் மேற்பார்வையாளராக 4 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பாலன் மகன் சந்திரசேகரன்(48). இவர், கடந்த 22-ம் தேதி கும்பகோணத்தில் உள்ள 2 வங்கிகளில் ரூ. 17 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, தான் வந்த காரில் பாதுகாப்பாக வைத்தார். இதனைத் தொடர்ந்து, அவர், கும்பகோணம், மடத்துத் தெருவில் உள்ள காப்பித் தூள் கடைக்குச் சென்று, காபித்துாள் வாங்கி விட்டு, காரில் வந்து பார்த்த போது, தான் வைத்திருந்த ரூ. 17 லட்சம் பணம் திருட்டு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், இது தொடர்பாகச் சந்திரசேகரன், கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஆய்வு மேற்கொண்டனர். அதில் பதிவான காட்சிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ளவர்களைப் பற்றி, போலீஸார், தமிழகத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், பிரபல கொள்ளையனான பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர், இளங்கோ நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செந்தில்குமார் (என்கின்ற) மண்டை செந்தில்குமார்(40), சென்னை, கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்த மூர்த்தி மகன் சுக்காபி (என்கின்ற) சுரேஷ்(27), இதே பகுதியைச் சேர்ந்த பிரதாபன் மகன் செல்வகணபதி (என்கின்ற) ராசுக்குட்டி(19), விழுப்புரம் மாவட்டம், வீடூர், அக்னி குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சசிகுமார்(30), காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், ஊத்துக்காட்டைச் சேர்ந்த சுரேஷ் மகன் விஷ்வா(21), திருச்சி மாவட்டம், துவாக்குடி, அண்ணா வளைவைச் சேர்ந்த பாண்டியன் மகன் சாந்தகுமார்(23) ஆகிய 6 பேர் , சந்திரசேகரன் காரில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
பின்னர், அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், 1-ம் தேதி கிழக்கு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட பகுதிகளில் நின்று இருந்த, இந்த 6 பேரையும், போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.7,72,000 ரொக்கப் பணத்தையும், அவர்கள் அந்தப் பணத்தை திருட பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன்கள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியது, “கும்பகோணம் காரில் இருந்த ரூ. 17லட்சம் பணம் திருட்டுப் போனது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்யப்பட்டு, அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தவர்களின் உருவப்படத்தை பதிவு செய்து அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தோம், அதில் பிரபல கொள்ளையனான மண்டை செந்தில்குமார், உருவப்படம் உள்ளது என போலீஸார் தெரிவித்ததின் பேரில்,மண்டை செந்தில்குமார் உள்ளிட்ட 6 பேரை பிடித்தோம்.
இவர்கள் 6 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் திருச்சி, வேலூர் சிறையில் இருந்த போது, நண்பர்களாகுகின்றனர். பின்னர், இவர்கள் 6 பேர் வெளியில் வந்து, கடந்த 18-ம் தேதி புதுச்சேரியில் கூடி, செல்லும் வழியில் பணத்தை திருடிச் செல்ல முடிவு செய்து, சிதம்பரத்தில் ரூ. 50 ஆயிரம் பணத்தைத் திருடி விட்டு, வேளாங்கன்னியில் அறை எடுத்து, உல்லாசமாக பொழுதைக் கழிக்கின்றனர்.
பின்னர், பணம் தீர்ந்தவுடன், அங்கிருந்து புறப்பட்டு, திருநாகேஸ்வரத்தில் அறை எடுத்துத் தங்குகிறார்கள், அங்கிருந்து 22-ம் தேதி புறப்பட்டு, கும்பகோணத்திற்கு வந்து, சந்திரசேகரன், பணத்தை திருடிச் சென்று விடுகிறார்கள். இவர்கள், கல்லணைக்கு சென்று, அங்கு பணத்தைப் பிரித்துக் கொண்டு 6 பேரும் பிரிந்து, பல்வேறு இடங்களில் உல்லாசமாக இருக்கின்றார்கள். இவர்கள் 6 பேரும் மீண்டும் கும்பகோணத்திற்கு வந்த போது பிடிபட்டார்கள்.
இதில், மண்டை செந்தில்குமார் மீது, வழிப்பறி,கொள்ளை,கன்னக்களவு, உள்ளிட்ட 44 வழக்குகளும், சுரேஷூக்கு கொலை, வழிப்பறி உள்ளிட்ட 12 வழக்குகளும், சசிகுமாருக்கு வழிப்பறி, கன்னக்களவு, திருட்டு உள்ளிட்ட 10 வழக்குகளும், சாந்தகுமாருக்கு வழிப்பறி , திருட்டு உள்ளிட்ட 8 வழக்குகளும், விஷ்வா மற்றும் செல்வகணபதி ஆகியோருக்கு தலா ஒரு அடிதடி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில்குமார்,சுரேஷ், சசிகுமார், சாந்தகுமார்,விஷ்வா,செல்வகணபதி ஆகியோர் தமிழகத்தின் பல இடங்களில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்துகொண்டு திருடிய பணத்தில் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துகொண்டு, மேலும் பல குற்றச்செயல்களுக்கு திட்டம் தீட்டி வந்தநிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாகும்” என்றார்.
மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பற்றி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT