Published : 26 Feb 2024 03:38 PM
Last Updated : 26 Feb 2024 03:38 PM
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் திருட்டு வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டதோடு, தன்னையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதால் மனமுடைந்த மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனியைச் சேர்ந்தவர் துரை பிரித்திவிராஜ் (35). விஏஓவாக பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றவர். தற்போது, பாஜக சுற்றுப்புற சூழல் அணி விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 23ம் தேதி குடும்பத்தினருடன் பந்தல்குடியில் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த ரூ.2.60 லட்சம் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீடு புகுந்து திருடியது அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாங்குளத்தைச் சேர்ந்த மாணிக்கம் (61) என்பது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்ளன. காவல் நிலையத்தில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதோடு, பட்டதாரியான அவரது மகன் கர்ணன் (25) என்பவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, கர்ணன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் கூறி குடும்பத்தினிடம் கர்ணன் மனவேதனை அடைந்துள்ளார். சற்று நேரத்தில் மாணிக்கத்திற்கு ரத்தக் கொதிப்பு மாத்திரை எடுத்துவருமாறு கர்ணனை போலீஸார் அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர். வெகு நேரமாகியும் அவர் திரும்பிவரவில்லை. சந்தேகமடைந்த மாணிக்கத்தின் குடும்பத்தினர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் கர்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி தகவலறிந்த அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் மாணிக்கம் வீட்டுக்குச் சென்று கர்ணனின் உடலை கைப்பற்றி செய்து பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், தனது மகன் தற்கொலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாய் தேவி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனிடம் இன்று காலை மனுக்கொடுத்தார். இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்படும் என்றும், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்வதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது அறையிலிருந்து வெளியே வந்த தேவி, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த போலீஸார் உள்ளிட்டோர் அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT