Published : 22 Feb 2024 04:00 AM
Last Updated : 22 Feb 2024 04:00 AM
சென்னை: நடிகை கவுதமியிடம் நிலம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
125-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்திருப்பவர் நடிகை கவுதமி.இவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்தாண்டு புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ``நான் சினிமாவில் 17 வயதுமுதல் நடித்து சேமித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் ( தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி ) வாங்கினேன்.அதை எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக விற்பனை செய்ய முடிவு செய்தேன்.
இந்த நேரத்தில் கட்டுமான நிறுவன அதிபரும், பாஜக பிரமுகராக இருந்தவருமான வேளச்சேரி காந்தி சாலை பகுதியில் வசிக்கும் அழகப்பன் ( 63 ) என்பவர் அறிமுகமாகி எனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுத் தருவதற்கு உதவி செய்வதாகக் கூறினார். இதையடுத்து எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை ( பவர் ஆப் அட்டர்னி ) அழகப்பனுக்கு வழங்கினேன். அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்.
இந்த பத்திரங்களைத் தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். ஆனால்,எனது கையெழுத்தை மோசடியாகப் போட்டும், போலி ஆவணங்களைத் தயாரித்தும் அழகப்பனும், அவரது குடும்பத்தினரும் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பரில் கேரளாவில் பதுங்கி இருந்த அழகப்பன், அவரது மனைவி, மகன், மருமகள், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அழகப்பனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்கள் மூலம் நடிகை கவுதமியின் நிலத்தை அபகரித்தும், வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பரிமாற்றம் செய்தும் மோசடி செய்த குற்றச் சாட்டில் அழகப்பன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அது மட்டுமல்லாமல், சென்னையில் கடந்த 7 நாட்களில் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய 19 பேர்மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT