Last Updated : 14 Feb, 2024 06:00 PM

 

Published : 14 Feb 2024 06:00 PM
Last Updated : 14 Feb 2024 06:00 PM

‘குற்றச் செயல்களை தடுக்க மதுரை நகர் முழுவதும் 14,000 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு’

படம்: கிருஷ்ணமூர்த்தி

மதுரை: குற்றச் செயல்களை தடுக்க மதுரை நகர் முழுவதும் சுமார் 14,000 சிசிடிவிக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது என மதுரை ஓபுளா படித்துறை ரவுண்டானாவில் புதிய புறக்காவல் நிலைய திறப்பு விழாவில் காவல் ஆணையர் ஜே.லோகநாதன் தெரிவித்தார்.

மதுரை நகரில் குற்றச்செயல்களை தடுக்க, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. இதன்படி, மதுரை வைகை தென்கரையில் ஓபுளா படித்துறை பகுதியில் ஏற்கெனவே இருந்த புறக்காவல் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, 4 சிசிடிவி கேமராக்களுடன் கூடிய புறக்காவல் நிலையமாக மாற்றப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயில் காவல் உட்கோட்ட உதவி ஆணையர் காமாட்சி முயற்சியில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா இன்று நடந்தது. காவல் ஆணையர் ஜே.லோகநாதன் திறந்து வைத்து, சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''இப்பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்க, ஏற்கெனவே இப்பகுதியில் இருந்த புறக்காவல் நிலையத்தை சிசிடிவி கேமராக்களுடன் நவீனப்படுத்தி திறந்துள்ளோம். தற்போது, 4 கேமராக்களுடன் செயல்படும். இது ரவுண்டானா பகுதியாக இருப்பதால் மேலும், 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இதன்மூலம் மதிச்சியம், இஸ்மாயில்புரம், நெல்பேட்டை பகுதி மற்றும் வைகை வடக்கரை, தென்கரை ரோட்டில் வழிப்பறி போன்ற குற்றச் செயல்களை தடுக்க முடியும்.

இந்த புறக்காவல் நிலையத்தில் பொருத்திய சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள எல்இடி திரைகள் மூலம் கண்காணிக்கலாம். இரவு, பகலில் சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் இருப்பார்கள். காவலர்கள் இருப்பதால் இந்த பகுதியில் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. குற்றச் செயல் புரிவோரும் தவிர்ப்பர். அவசர தேவைக்கு காவல் நிலையத்தை அணுக முடியாத மக்கள், அருகிலுள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்களும் புறக்காவல் நிலையத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனை பயன்படுத்தி தகவல் கூறலாம்.

மதுரை மாநகர் முழுவதும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை- நத்தம் மேம்பாலத்தில் வாகனங்களை வேகமாக செல்வோர் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை பொருத்திய சிசிடிவிக்கள் மூலமும் தொடர்ந்து கண்காணிக்கிறோம். மேலும், காவல் துறை ரோந்து வாகனம் மூலமும் கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் துணை காவல் ஆணையர் பாலாஜி, மீனாட்சி கோயில் காவல் உதவி ஆணையர் காமாட்சி, விளக்குத்தூண் காவல் ஆய்வாளர்கள், மணிகண்டன், தீபா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x