Published : 13 Feb 2024 05:22 AM
Last Updated : 13 Feb 2024 05:22 AM

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை உறுதி

ராஜேஷ்தாஸ்

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விழுப்புரம் நீதிமன்றம் உறுதி செய்தது.

2021-ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16-ல் தீர்ப்பளித்தது. மேலும், பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில், அப்ேபாதைய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து இருவரும் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த பிப்.1-ம் தேதி முதல் ராஜேஷ்தாஸ் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தனது தரப்பில் தானே வாதாட அனுமதிக்குமாறு கோரினார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, பிப்.7-ம் தேதி வரை வாதாடி, தனது வாதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன் அரசு தரப்பு வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து, பிப்.12-ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பூர்ணிமா அறிவித்தார்.

அதன்படி, நேற்று நீதிமன்றம் கூடியதும், 3 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு, கீழமை நீதிமன்றமான தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதுவரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமீன் வழங்குவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதேபோல, முன்னாள் எஸ்.பி.யைபுகார் அளிக்கவிடாமல் தடுத்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெண் எஸ்.பி.க்குபாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்வருவதால், வழக்கை கள்ளக்குறிச்சிநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.எனவே, தீர்ப்பு தேதியை அறிவித்து விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் புதிதாக மனு தாக்கல் செய்திருந்தார்.

தடை விதிக்க மறுப்பு: இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஆனால், விழுப்புரம் முதன்மை நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி எம்.நிர்மல்குமார், இந்தவழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x