Published : 06 Feb 2024 03:18 PM
Last Updated : 06 Feb 2024 03:18 PM

கரூரில் மின் இணைப்பை மாற்ற ரூ.1,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மென் கைது

முருகானந்தம்

கரூர்: கரூரில் வணிக இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற ரூ.1,000 லஞ்சம் பெற்ற மின்வாரிய போர்மெனை கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் அருகேயுள்ள ஆச்சிமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். வீடு கட்டுமானத்தின் போது வாங்கிய வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ராயனூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.

வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்காக போர்மென் முருகானந்தம் ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் வழங்க விருப்பமில்லாத அந்நபர் இது குறித்து கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் போர்மென் முருகானந்தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.1,000 வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ராயனூர் அலுவலகத்தில் போர்மென் முருகானந்தத்திடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழங்கிய ரசாயனம் தடவிய ரூ.1000 இன்று ( பிப்.6) அக்கூலித் தொழிலாளி வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் சாமிநாதன், உதவி ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் முருகானந்தத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x