Published : 02 Feb 2024 04:00 AM
Last Updated : 02 Feb 2024 04:00 AM
சேலம்: தனது மருமகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த விசாரணைக்கும் தயார், என சேலம் மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மகன் சுதர்சன் பாபு ( 42 ). இவரது மனைவி சுதா ( 38 ). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, மகள் ஒருவர் உள்ளார். சேலம் கன்னங்குறிச்சி அருகே சின்னக் கொல்லப்பட்டியில் மனைவி யுடன் சுதர்சன் பாபு வசித்து வந்தார். நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நினை விழந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் சுதா கொண்டு வரப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீஸில் புகார்: இந்நிலையில், தனது சகோதரிக்கு, அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உரிய சிகிச்சை வழங்காததால் தான், அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறி, சுதாவின் சகோதரர் பரமசிவம் சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தனது தரப்பு விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அதில், சுதர்சன் பாபுவின் திருமணத்துக்குப் பின்னர், அவர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் பார்த்துக் கொண்டேன். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லாத போது, சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு, வெற்றிலை பாக்கு பழக்கம் இருந்தது. அதனால், மோசமான உடல்நிலைக்கு தள்ளப்பட்டார்.
நான் பொது வாழ்வில் இருப்பதால், தனியாகவே இருந்து வருகிறேன். இந்நிலையில், மருமகளின் குடும்பத்தினர், எனது பொது வாழ்வுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தவறான செய்தி பரப்புகின்றனர். இந்த விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் நானும் எனது குடும்பத்தினரும் தயாராக இருக்கிறோம், என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT