Published : 27 Jan 2024 06:19 AM
Last Updated : 27 Jan 2024 06:19 AM

காளையார்கோவில் அருகே வீட்டில் நுழைந்த கும்பல் - 5 பேரை கொடூரமாக தாக்கி நகை கொள்ளை

கொள்ளை சம்பவத்தைக் கண்டித்து மதுரை-தொண்டி நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

சிவகங்கை: காளையார்கோவில் அருகே அதிகாலையில் வீட்டில் நுழைந்த கும்பல், 5 பேரை கொடூரமாகத் தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கல்லுவழியைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி வேதபோதக அரசி (35), மகன் ஷெர்லின் (12), மகள் ஜோவின் ஜேக்கப் (10), ஜேக்கப் பாரியின் தந்தை சின்னப்பன் (65), தாயார் உபகாரம் (60) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீட்டின்கதவைப் பூட்டாமல் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சின்னப்பனை அரிவாளால் வெட்டினர். சப்தம் கேட்டுவந்த உபகாரம், வேதபோதக அரசியையும் வெட்டினர். பின்னர், 2 குழந்தைகளையும் இரும்புக் கம்பியால் தாக்கினர்.

தொடர்ந்து, பீரோவில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். பலத்த காயமடைந்த 5 பேரும் மயக்கமடைந்தனர். காலை 6 மணிக்கு நினைவு திரும்பிய ஜோவின் ஜேக்கப், பக்கத்து வீட்டில் இருந்தவர்களிடம் நிகழ்ந்ததைக் கூறி, உதவிக்கு அழைத்தார். அவர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த 5 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ராமநாதபுரம் டிஐஜி துரை, சிவகங்கை எஸ்.பி. அரவிந்த் மற்றும் போலீஸார் அங்கு வந்து, விசாரணை நடத்தினர். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கொள்ளை சம்பவத்தைக் கண்டித்து மதுரை- தொண்டி நெடுஞ்சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் மற்றும் எம்எல்ஏசெந்தில்நாதன் ஆகியோர்அவர்களைச் சமாதானப்படுத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x