Published : 24 Jan 2024 04:08 AM
Last Updated : 24 Jan 2024 04:08 AM

கனிமவள லாரி மோதி பெண் உயிரிழப்பு - குலசேகரம் அருகே சடலத்துடன் சாலை மறியல்

நாகர்கோவில்: குலசேகரம் அருகே வெண்டலி கோட்டில் கனிமவளம் ஏற்று வதற்காக சென்ற லாரி மோதி பெண் உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த மக்கள், பெண் ணின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப் பட்டு வருவதாக பல ஆண்டுகளாக புகார் உள்ளது. தினமும் குமரி மாவட்டம் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமான எடையுடன், வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால், சாலைகள் பழுதடைகின்றன. விபத்துகள் தினமும் நிகழ்கின்றன. இதனைக் கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இருப்பினும் கனிம வளக் கொள்ளையையும், அதனால் ஏற்படும் விபத்துக்களையும் தடுக்க, முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குலசேகரம் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ், தனது மனைவி அனிதாவுடன் ( 40 ) மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார். கல் குவாரிகள் அதிகமுள்ள சித்திரங்கோடு பகுதியில் இவர்களின் பின்னால் வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அனிதா உயிரிழந்தார். படுகாயமடைந்த அமல்ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது போன்ற விபத்துகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர், விபத்தில் இறந்த அனிதாவின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக, காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் பங்கேற்றனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் மாலை வரை நடைபெற்றது. போக்குவரத்து பாதித்து பதற்றம் நிலவியது. அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் அங்கு வந்து, போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள், ‘குமரி வழியாக இயக்கப்படுகின்ற அனைத்து கனிம வள லாரிகளையும் தடை செய்ய வேண்டும்’ என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனிதாவின் சடலத்தை போலீஸார் எடுக்க முயன்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவு 7 மணி வரை நீடித்த சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x