Published : 11 Jan 2024 07:14 AM
Last Updated : 11 Jan 2024 07:14 AM
பெங்களூரு/பனாஜி: மேற்கு வங்கத்தை சேர்ந்த சேர்ந்த சுச்சானா சேத் (39) பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவர் தனது கணவர் வெங்கட்ராமனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டுள்ளார்.இந்நிலையில் சுச்சானா சேத், தன் 4 வயது மகனுடன் கடந்த 6-ம் தேதி கோவா சென்றார்.
அங்குள்ள தனியார் விடுதியில் தன் மகனை கொன்று 8-ம் தேதி வாடகை கார் மூலம் பெங்களூரு திரும்பினார். விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் கோவா போலீஸார் கர்நாடக போலீஸாரின் உதவியோடு சுச்சானா சேத்தை சித்ரதுர்காவில் 9-ம் தேதி கைது செய்தனர். அவர் கொண்டுவந்த சூட்கேஸில் 4 வயது மகனின் உடல் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் 4 வயது மகனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் குமார் நாயக் கூறுகையில், ‘‘36 மணி நேரத்துக்கு முன்பாக குழந்தை கொல்லப்பட்டு இருக்கலாம். தலையணை அல்லது துணி மூலம் அழுத்தி கொலை செய்திருக்கலாம். கழுத்திலும், உடலிலும் எவ்வித ரத்த காயமும் இல்லை" என்றார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தந்தை வெங்கட்ராமனிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடலை பெங்களூரு கொண்டுவந்து நேற்று அடக்கம் செய்தனர்.
இதற்கிடையே கோவா போலீஸார் சுச்சானா சேத் தங்கியிருந்த தனியார் விடுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு காலியான 2 இருமல் மருந்து பாட்டில்கள் கிடந்தன. இதனால் அதிக டோஸ் கொண்ட இருமல் மருந்தை கொடுத்து, குழந்தை மயங்கிய பின்னர் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் அறையில் போர்வை, துண்டு ஆகியவற்றில் ரத்த கறை இருந்ததையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் சுச்சானா சேத்திடம் விசாரித்த போது, ‘‘நான் குழந்தையை கொல்லவில்லை. 8ம் தேதி காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தை இறந்து கிடந்தது. இதனால் நானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். பயத்தின் காரணமாக யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து கர்நாடகாவுக்கு புறப்பட்டேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் போர்வை, துண்டு ஆகியவற்றில் ரத்தக்கறை ஏற்பட்டது'' என கூறியுள்ளார்.
ரூ.2.5 லட்சம் கேட்ட சுச்சானா: சுச்சானா சேத் விவகாரத்து கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மகனை பராமரிக்க மாதம் ரூ. 2.5 லட்சம் வெங்கட் ராமன் தர வேண்டும். ஓராண்டுக்கு அவர் ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார் என அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT