Published : 07 Jan 2024 04:08 AM
Last Updated : 07 Jan 2024 04:08 AM
கோவை: கோவை செட்டிபாளையம் சாலை, மலுமிச்சம்பட்டி அருகேயுள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலா இசக்கி முத்து. ஓட்டுநர். இவரது மனைவி தனலட்சுமி ( 37 ).
பிசியோதெரபிஸ்ட். கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி வீட்டில் தன லட்சுமி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். புகாரின் பேரில், செட்டி பாளையம் போலீஸார் விசாரித்து வந்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, தன லட்சுமியின் வீட்டில் இருந்து ஓர் ஆணும், பெண்ணும் வெளியேறியது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்த சுரேஷ் ( 39 ), வால்பாறை சோலையார் நகரைச் சேர்ந்த சந்திர ஜோதி ( 41 ) என்பதும், இக்கொலை வழக்கில் இருவருக்கும் தொடர்புடையதும் தெரிந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: கோட்டூரில் வாடகைக்கு வீடு எடுத்து சுரேஷ், சந்திர ஜோதி இருவரும் தம்பதி போல வாழ்ந்தனர். ஒரு வழக்கு தொடர்பாக தனலட்சுமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் சிறையில் இருந்த சந்திர ஜோதிக்கும், தன லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத் தன்று சுரேஷ் - சந்திர ஜோதி ஆகியோர் தன லட்சுமியின் வீட்டுக்கு வந்து, அவரிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளனர். அவர் தரமறுத்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுரேஷ், சந்திர ஜோதி ஆகியோர் தன லட்சுமியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். தற்போது, சுரேஷ், சந்திர ஜோதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT