Published : 02 Jan 2024 04:06 AM
Last Updated : 02 Jan 2024 04:06 AM

திண்டுக்கல்லில் நடந்து சென்றவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை

சதீஷ்

திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற இளைஞர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு தொடங்கிய ஜனவரி முதல் நாளே கொலை நடந் தது. அதேபோல் 2023-ம் ஆண்டு முடியும் டிசம்பர் 31-ம் தேதியும் கொலை நடந்தது. சராசரியாக வாரம் ஒரு கொலை என கடந்த ஆண்டில் கொலைச் சம்பவங்கள் நடந்தன. இதில் இரட்டைக் கொலை, ஓடும் பேருந்தில் கொலை என சில கொலைச் சம்பவங்கள் பொது இடங்களில் நடந்து மக்களை அச்சமடையச் செய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வட மதுரை அருகே வன்னிய பாறைப் பட்டியில் இடப்பிரச்சினை காரணமாக கொலை நடந்தது.

இதில் பெரியசாமி (35) என்ப வரை அவரது உறவினர்கள் செந்தில் குமார் (24), ரமேஷ் (23), ராஜேஷ் கண்ணன் ((25), சிவபாண்டி (21) ஆகியோர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இது குறித்து வட மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இத்துடன் கடந்த ஆண்டு மொத்தம் 56 கொலைகள் நடந்துள்ளன. 2024-ம் ஆண்டில் கொலைகள், விபத்துகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறைய வேண்டும் என போலீஸார் வேண்டிக்கொண்டனர்.

புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டமும் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் திடீரென அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் அவரது உடல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக் கண்ட பலரும் அலறியடித்து ஓடினர். சிலர் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் இறந்தவர் திண்டுக்கல் பிள்ளை யார்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் (35) என்பது தெரியவந்தது. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் அருகே எரம நாயக்கன் பட்டியைச் சேர்ந்த பிரேம் குமார் (27), சரவணன் (20) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x