Last Updated : 01 Jan, 2024 03:29 PM

 

Published : 01 Jan 2024 03:29 PM
Last Updated : 01 Jan 2024 03:29 PM

புதுச்சேரியில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட 4 மாணவர்களில் இதுவரை மூவர் உடல்கள் மீட்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி மாயமான 4 பேரில் இதுவரை மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஒரு மாணவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுவை நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், இவரின் மனைவி மீனாட்சி (47). இவர்களுக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மோகனா (16), 10-ம் வகுப்பு படிக்கும் லேகா (14) என 2 மகள்கள் இருந்தனர். இவர்களின் நண்பர்கள் எல்லைப் பிள்ளைச்சாவடியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவரான நவீன் (12), கேட்டரிங் கல்லூரி மாணவர் கதிர்காமம் பகுதியை சேர்ந்த கிஷோர் (17). மீனாட்சியுடன் 4 மாணவ, மாணவிகளும் புத்தாண்டை முன்னிட்டு பழைய துறைமுகம் சீகல்ஸ் அருகே உள்ள கடற்கரைக்கு நேற்று வந்தனர்.

மீனாட்சி மணல்பரப்பில் அமர்ந்திருந்தார். 4 பேரும் கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதைக் கண்டு மீனாட்சி சத்தமிட்டார். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை காப்பாற்ற முயன்றும் பலனில்லை. அவர்கள் 4 பேரும் கடலில் மாயமாகினர். தீயணைப்பு துறை வீரர்கள், ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் போலீஸார் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இன்று காலை வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கியது. அந்த உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை சின்னவீராம்பட்டிணம் கடலில் மாணவர் ஒருவரது சடலமும் கரை ஒதுங்கியது. அந்த மாணவர் கிஷோர் என்பது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதன்பின்னர், கடலில் அடித்து செல்லப்பட்ட மற்றொரு மாணவி மேகனாவின் உடல், வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. கடலில் அடித்து செல்லப்பட்டோரில் மூவரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதில் மாணவர் நவீன் உடலை தேடும் பணியில் கடலோர காவல்படை போலீஸார், மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பலனில்லா எச்சரிக்கை: இச்சம்பவம் நிகழ்ந்தவுடன் புதுச்சேரி கடலில் இறங்குவதை போலீஸார் தடுத்தனர். புத்தாண்டு தினமான இன்றும் கடற்கரையில் அதிகளவு மக்கள் குவிந்தனர். ஆனாலும் எச்சரிக்கையை மீறி பலரும் கடலில் குளித்தப்படி இருந்தனர். பலரும் ஆபத்தை அலட்சியப்படுத்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x