Published : 31 Dec 2023 06:57 AM
Last Updated : 31 Dec 2023 06:57 AM
பாஸ்டன்: அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களில் ஒருவர் ராகேஷ் கமல் (57). இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் ராகேஷ் கமல், அவரது மனைவி டீனா (54), மகள் அரியானா (18) ஆகியோர், டோவர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பாஸ்டனிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் டோவர் நகரம் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குடும்ப வன்முறை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராகேஷ் கமலின் உடல் அருகே கைத்துப்பாக்கியை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
டோவர் மாவட்ட நீதிபதி இந்த சம்பவம் குறித்து, இது ஒரு மிகப் பயங்கரமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு வீட்டைச் சேர்ந்த 3 பேரும் இறந்துவிட்டார்கள் என்றால் யார், இந்த சம்பவத்துக்கு யார் காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களும் அனுப்பப்பட்டுள்ளன.
பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக போலீஸார் காத்திருக்கின்றனர். அந்த முடிவுகள் வெளியானால்தான் இது கொலையா அல்லது தற்கொலை சம்பவமா என்பது தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்தனர். பெரும் பணக்காரரான ராகேஷ் கமல் குடும்பத்தாரின் இறப்புக்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இதனிடையே ராகேஷ் கமல்-டீனா தம்பதியினர், கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்ததாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. 3 பேரும் உயிரிழந்தது தொடர்பாக அவர்களது நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகேஷின் மனைவி டீனா, டெல்லி பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் படித்தவர் ஆவார். ராகேஷ் கமல், பாஸ்டன் மற்றும் எம்ஐடி ஸ்லோவான் மேலாண்மை கல்வி மையம் மற்றும் ஸ்டான்ட்போர்டு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். மகள் அரியானா கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
ஆன்லைனில் கல்வி வழங்கும் தனியார் மையத்தில் இவர்கள் பணியாற்றியதாகவும் அதில் பல பெரியபொறுப்புகளை வகித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் டோவர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது வீடு 50 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களிலும் இவர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT