Published : 31 Dec 2023 04:02 AM
Last Updated : 31 Dec 2023 04:02 AM

‘கேஒய்சி’ படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு வரும் குறுஞ்செய்திகளை நம்பாதீர் - வங்கி மோசடிகள் உஷார்!

சென்னை: வங்கி மோசடிகள் குறித்தும், எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மத்திய ரிசர்வ் வங்கியின் மூத்த பொது மேலாளர் வி.ரங்கா ராவ் வங்கி மோசடிகள் குறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: வாடிக்கையாளர் பற்றி அறிந்து கொள்வதற்காக ‘கேஒய்சி’ படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு வங்கிகளில் இருந்து ஒரு லிங்க் அனுப்பி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

அந்த லிங்க்கைத் தொட்டால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதோடு, கணக்கும் முடக்கப் படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் போலியானவை. இவ்வாறு வரும் தகவல்கள் போலியானவையா என்பதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். குறிப்பாக, வங்கியிலிருந்து அனுப்பப்படும் குறுஞ் செய்திகள் ( எஸ்எம்எஸ்கள் ) 10 இலக்கம் கொண்ட எண்களிலிருந்து அனுப்பப்படுவதில்லை.

வங்கிகளிலிருந்து அனுப்பப்படும் உண்மையான குறுஞ் செய்தி தகவல்கள் எண்களுக்குப் பதிலாக எழுத்துக்களாக இடம் பெற்றிருக்கும். முதல் 2 எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களாகவும், அடுத்த 3 எழுத்துக்கள் அந்த வங்கியின் பெயரையும், அடுத்த 2 எழுத்துக்கள் மீண்டும் 2 ஆங்கில எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.

உதாரணமாக, எஸ்பிஐ வங்கியிலிருந்து வரும் குறுந் தகவல்கள் ‘BZ-SBIINB’ எனக் குறிப்பிடப் பட்டிருக்கும். அதேபோல், வாட்ஸ் - அப் மூலம் தகவல் வந்தால், அதில் வங்கியின் பெயர் குறிப்பிட்டிருப்பதோடு அருகில் பச்சை நிறத்தில் டிக் குறியீடு இடம் பெற்றிருக்கும். அவ்வாறு இருந்தால் அது வங்கியிலிருந்து வந்துள்ள உண்மையான வாட்ஸ் - அப் தகவல் என நம்பலாம். அவ்வாறு இல்லையெனில் அது போலியாகும். அதை உடனடியாக நீக்கி விட வேண்டும்.

அதேபோல், வங்கியிலிருந்து உண்மையாகவே ஒரு லிங்க் வந்தாலும், அதைத் திறந்து அதன் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்கள் தங்களது இன்டர் நெட் அல்லது மொபைல் வங்கி மூலம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, “இத்தகவல் முழுக்க உண்மையானதுதான். வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்று குறுஞ் செய்திகள் வந்தால், பதற்றப்பட்டு அதை உடனடியாக திறந்து பார்க்கக் கூடாது. நிதானமாக அச்செய்தி எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டு பார்க்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x