Published : 30 Dec 2023 09:27 AM
Last Updated : 30 Dec 2023 09:27 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமணசமுத்திரம் பகுதியில் நள்ளிரவில் லாரி மோதி பக்தர்கள் 5 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூரில் இருந்து பிள்ளையார்பட்டி வழியாக அய்யப்பன் கோயிலுக்கு செல்லக்கூடியவர்கள் ஒரு வேனிலும், திருவள்ளூரில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய ஓம்சக்தி கோயில் பக்தர்கள் மற்றொரு வேனிலும், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் செல்லக்கூடியவர்கள் ஒரு காரிலும் நேற்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வந்துள்ளனர்.
இந்த வாகனங்களில் வந்த அனைவரும் புதுக்கோட்டை-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் வட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே உள்ள மறவப்பட்டியைச் சேர்ந்த முகமது ஹக்கீம்(40) என்பவரது டீக்கடை அருகே சாலையோரமாக நேற்று (டிச.29) நள்ளிரவில் வாகனங்களை நிறுத்திவிட்டு, டீ குடித்துள்ளனர். சிலர் டீக்கடையிலும், சிலர் வாகனங்களுக்கும் அமர்ந்திருந்தனர்.
அப்போது, அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமென்ட் ஏற்றி வந்த லாரியானது கட்டுப்பாட்டை மீறி 3 வாகனங்கள் மீது மோதிவிட்டு, டீக்கடைக்குள் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து மோதியது.
இதில், அய்யப்பன் கோயில் பக்தர்களான திருவள்ளூர் மாவட்டம் திருவெல்லைவயல் அருகே எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோகுலகிருஷ்ணன்(26), மதுரவாயல் அருகே அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுரேஷ்(34), அமிஞ்சிக்கரையைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்(25) ஆகிய 3 பேரும், ஓம்சக்தி கோயில் பக்தர்களான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பனையன்சேரியைச் சேர்ந்த பாலன் மகன் ஜெயகநாதன்(60), அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி சாந்தி(55) என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயம் அடைந்த சிமென்ட் லாரி ஓட்டுநர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மணிகண்டன்(39) உட்பட 20 பேர் காயம் அடைந்தனர். அனைவரையும், போலீஸார் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து நமணசமுத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT