Published : 22 Dec 2023 04:06 AM
Last Updated : 22 Dec 2023 04:06 AM

உதகை புத்தக திருவிழாவில் பழமையான புத்தகத்தை திருடியவர் கைது

உதகை: உதகை புத்தக திருவிழாவில் 100 ஆண்டுகள் பழமையான புத்தகத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள நூலகத்தில், கடந்த அக்டோபர் மாதம் இலக்கிய திருவிழா நடைபெற்றது. இதில் எழுத்தாளர்களும், பிரபலங்களுமான பெருமாள் முருகன், சுதா மூர்த்தி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், நீலகிரி நூலக நிர்வாகம் சார்பில் இலக்கியத் திருவிழாவில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதில் ‘பைரேட்ஸ் ஆஃப் மலபார்’ என்ற 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த புத்தகமும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த புத்தகம் சாதாரணமாக அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு கிடைக்காது என்பதால், இதன் விலை ரூ.10 ஆயிரம் என்று நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், இந்த புத்தகம் இலக்கிய திருவிழாவின்போது காணாமல் போய் விட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த நீலகிரி நூலக நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், உதகை மத்திய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். 2 மாதங்களுக்குப் பிறகு, நீலகிரி நூலக புத்தக கண்காட்சியில் திருடுபோன புத்தகத்தை கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கட்டிடா தப்நாத் என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விற்பனைக்கு என்று பதிவிட்டிருந்தார்.

அதனை இன்ஸ்டாகிராமில் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.15 ஆயிரத்துக்கு விலைக்கு கேட்டும், அவர் வழங்கவில்லை. இன்னும் கூடுதல் விலை கேட்பவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த பதிவை நீலகிரி நூலக நிர்வாகத்தினர் பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து உதகை பி-1 காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீஸார் பெங்களூருவுக்கு சென்று, அந்த இளைஞரை கைது செய்து புத்தகத்தை மீட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x