Published : 09 Dec 2023 07:30 AM
Last Updated : 09 Dec 2023 07:30 AM
சென்னை: கட்டுமான நிறுவனம் தோண்டிய 50 அடி பள்ளத்தில் புதைந்த 2 பேர் 5 நாள் தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளர் தலை மறைவாக உள்ளார். சென்னை கிண்டி 5 பர்லாங் சாலையில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கட்டுமான வேலை நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத பள்ளம் தோண்டப்பட் டிருந்தது. கட்டுமானப் பணியாளர்கள் தங்கி பணி செய்ய வசதியாக அருகில் கன்டெய்னர் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி சென்னையில் பெய்த கனமழையால், 50 அடி ஆழ பள்ளத்தின் பக்கவாட்டில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், பணியாளர்கள் தங்குவதற்காக நிறுத்தப்பட்டிருந்த கன் டெய்னர் மற்றும் அருகிலிருந்த பெட்ரோல் பங்க்கின் தற்காலிக ஜெனரேட்டர் அறை ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக பள்ள நீரில் கவிழ்ந்து மூழ்கின.
இந்த சம்பவத்தில் கன்டெய்னரில் தங்கியிருந்த வேளச்சேரியைச் சேர்ந்த பொறியாளர் ஜெயசீலன் (29), ஜெனரேட்டர் அறையிலிருந்த வேளச்சேரி, விஜயநகரைச் சேர்ந்த ஊழியர் நரேஷ் (24) ஆகியோர் நீரில் மூழ்கினர். இதேபோல், மேலும் 3 ஊழியர்கள் சரிவில் சிக்கினர். அப்போது அப்பகுதியில் பணி யில் இருந்த போக்குவரத்து போலீஸார், அவர்களை மீட்டனர். இந்நிலையில், உயிரோடு மண்ணுக்குள் புதைந்த இருவரையும் மீட்கும் பணியில் தீயணைப்பு, காவல், மாநகராட்சி மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒருங்கிணைந்து ஈடுபட்டனர். அப்பகுதி முழுவதும் மழை வெள்ளம் தேங்கியிருந்ததால், நீரை வெளியேற்று வதில் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து, அதிதிறன் கொண்ட மோட்டார்கள், 2 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன்கள் மீட்பு பணிக்காகப் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், 5-வது நாளான நேற்று அதிகாலை 4.45 மணியளவில் நரேஷ், மதியம் 1.45 மணியளவில் ஜெயசீலன் ஆகிய இருவரும் பள்ளத்திலிருந்து சடலமாக அடுத்தடுத்து மீட்கப்பட்டனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, கட்டுமான நிறுவன உரிமையாளர் சிவகுமார், அந்நிறுவன கட்டுமான பணியிட மேற் பார்வையாளர் சேலையூரைச் சேர்ந்த எழில், அதே பணியை கவனித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுவது, உயிர் இழப்பைஏற்படுத்தும் வகையில் செயல்படுவது ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி போலீஸார் வழக்குப் பதிந்தனர். சிவகுமார் தலைமறைவான நிலையில், மற்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகுமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT