ஒட்டன்சத்திரம் அருகே பயணிகள் நிழற்குடையில் கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பயணிகள் நிழற்குடையில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார்.
பழநி அருகேயுள்ள தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (27), ராகவேந்திரன் (26), வாகரை பகுதியைச் சேர்ந்த கனீஸ்வரன் (25) உட்பட 4 பேர் காரில் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் - தொப்பம்பட்டி சாலையில் உள்ள மாம்பறை முனியப்பன் கோயிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை தொப்பம்பட்டியை சேர்ந்த சண்முகசுந்தரம் (27) ஓட்டினார். இன்று (டிச.8) மாலை பொருளூர் புளியம்பட்டி பிரிவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடையில் பலமாக மோதியது. இதில் நிழற்குடை இடிந்து காரின் மேல் விழுந்தது.
இதில் காரில் வந்த பழநியில் ஹோட்டல் நடத்தி வரும் சண்முகசுந்தரம், தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக உள்ள தமிழரசன், கனீஸ்வரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ராகவேந்திரன் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பயணிகள் நிழற்குடையில் அதிர்ஷ்டவசமாக எவரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கள்ளிமந்தயம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
