Last Updated : 03 Dec, 2023 12:57 PM

 

Published : 03 Dec 2023 12:57 PM
Last Updated : 03 Dec 2023 12:57 PM

ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி புகையிலை பொருட்கள் விற்பனை @ கோவை

கோவை: தமிழகத்தில் ஹான்ஸ், பான்பராக், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பல வகையான புகையிலைப் பொருட்களின் தயாரிப்பு, இருப்பு, விற்பனை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க, மாநிலம் முழுவதும் அந்தந்த பகுதி காவல் துறையினர் ரோந்துப் பணி, சோதனையில் ஈடுபட்டு அவற்றை விற்பவர்களை கண்டறிந்து கைது செய்தல், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சமீப ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வெளியில் மறைமுகமாக வாங்கி பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசின் சார்பில் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, காவல்துறையினர் மாவட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்தி வரும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக, உணவு பாதுகாப்புத் துறையினருடன், காவல் துறையினர் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, இருப்பு, கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேசமயம், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகின்றன.

இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ரூ.10,ரூ.20-க்கு பாக்கெட்டுகளை வாங்கி அதை ரூ.80, ரூ.100 என அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர். மளிகைக்கடை, பெட்டிக்கடை என பாரபட்சமின்றி பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் புழக்கம் உள்ளது. இதைத் தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

இதற்கிடையே, காவல் துறையினரின் கெடுபிடி அதிகரித்துள்ளதால், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்க பல்வேறு ரகசிய குறியீடுகளை வியாபாரிகள் பயன்படுத்துவதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடைக்காரர்கள், விற்பனையாளர்கள் தங்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வாடிக்கையாக வாங்கும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் தினமும் ஒரு ரகசிய குறியீட்டையும், உடல் பாவனைகளையும் தெரிவிக்கின்றனர்.

அதாவது, வியாபாரிகள் தெரிவித்தபடி புகையிலைப் பொருட்களை வாங்க வருபவர்கள் ஒரு நாள் வலது கையில் கட்டை விரல் அருகே ஏ என்று எழுதி வருவது, மறுநாள் இடது கை கட்டை விரல் அருகே ஒரு ஆங்கில எழுத்து எழுதி வருவது என தினமும் ஒரு குறியீடுகளை பயன்படுத்து கின்றனர். அதோடு, கண்ணை இருமுறை மூடி திறப்பது, கையில் இரண்டு விரலை மட்டும் சில முறை காட்டுவது போன்ற உடல் பாவனை குறியீடுகளையும் கடைக் காரர்கள் தெரிவித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

ஒருவரிடம் தெரிவித்தால், அவர் மூலம் அந்த கடைக்கு வழக்கமாக வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு மேற்கண்ட ரகசிய குறியீடு தகவல்களை தெரிவித்து விடுகின்றனர். இவ்வாறு குறியீட்டுடன் வந்து உடல் பாவனைகளை தெரிவிப்பவர்களுக்கு வியாபாரிகள் தடையின்றி புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் கேட்டபோது, ‘‘தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரகசிய குறியீடு முறை மூலம் விற்பதையும் கண்டறிந்துள்ளோம். இந்த வகையில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 கடைகள் கோட்டூரில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

ப்ராஜெக்ட் பள்ளிக் கூடம் திட்டத்தின் மூலமும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை செய்து வருகிறோம். அதன் மூலமும் மாணவர்களிடம் இருந்து ரகசிய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கின்றன. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக நடப்பாண்டு 621 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 638 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5,800 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதல் முறை விற்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

தொடர்ந்து விற்றால் சீல் வைக்கப்படுகிறது. கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் சமீபத்தில் 468 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 170 கடைகளில் விற்பனை செய்யப்படுவது தெரிந்து அக்கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 14 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகளை ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x