Published : 03 Dec 2023 12:25 PM
Last Updated : 03 Dec 2023 12:25 PM
திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி, துபாய் நாட்டில் மதுபான விடுதியில் டான்ஸராக வேலை செய்து விட்டு, சமீபத்தில் திருப்பூர் திரும்பியுள்ளார். இந்நிலையில், சிறுமி தன்னுடன் பள்ளியில் படித்த தோழிகளான 19 வயது இளம் பெண்களை அணுகியுள்ளார். அப்போது, அந்த சிறுமி துபாயில் அழகுக் கலை நிபுணர் வேலை செய்ததாகவும், நல்ல சம்பளம் கிடைத்ததாகவும், அங்கு வேலையில் சேர்த்துவிடுவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய 2 இளம் பெண்கள், தங்களின் பெற்றோரிடம் கூறி சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து, திருப்பூரை சேர்ந்த சிறுமி மற்றும் நடனக் கலைஞர்களாக உள்ள அவரது நண்பர்களான சென்னை போரூர் நிதின் (22), காட்டுப் பாக்கம் மோகன் (22), பெங்களூரூவை சேர்ந்த திலிப் (23) உட்பட 4 பேரும் சேர்ந்து, 2 இளம் பெண்களை கடந்த மாதம் 20-ம் தேதி துபாய் அனுப்பி வைத்தனர். இதற்காக இருவரிடமும் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.1 லட்சம் பெற்றுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் சிறுமி கூறியபடி வேலை இல்லாமல், மதுபான விடுதியில் நடனமாட அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மதுபான விடுதிக்கு வரும் ஆண்களிடம் நெருக்கமாக பழகும்படி, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோரிடம் இளம் பெண்கள் அலைபேசியில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸாரிடம் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், துபாயில் இருந்து 2 இளம் பெண்களை திருப்பூருக்கு போலீஸார் மீட்டு வந்தனர். இது தொடர்பாக வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து திலீப், மோகன், நிதின் மற்றும் 17 வயது சிறுமி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT