Published : 25 Nov 2023 05:02 AM
Last Updated : 25 Nov 2023 05:02 AM
உதகை:நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2014-ல் காவலாளிஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கூடுதல் துணை ஆணையர் முருகவேல் உள்ளிட்டோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய், சயான் ஆஜராகினர்.
இந்த வழக்கில் இதுவரை 189 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்கள் உள்ளிட்டதகவல் தொடர்பு ஆதாரங்கள்விரைவில் சமர்ப்பிக்கும் வகையில், விசாரணைக்கு கூடுதல் காலஅவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வரும்ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற, சென்னையைச் சேர்ந்த ஞானசம்பந்தம் என்பவரது மகன் சிவக்குமார்(54) ஆம்புலன்ஸ் சேவையை தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்தார்.
சிவக்குமாரின் தந்தை ஞானசம்பந்தம் தமிழ்நாடு கேடரில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி. சிவக்குமார் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இது தொடர்பான விசாரணைக்கு வரும் 28-ம் தேதிக்குள் ஆஜராகுமாறு சிவக்குமாருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT