Published : 23 Nov 2023 05:41 AM
Last Updated : 23 Nov 2023 05:41 AM

போக்சோ வழக்கில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கு போடப்பட்டதாக சர்ச்சை: நீலகிரி காவல் கண்காணிப்பாளர் மறுப்பு

உதகை: உதகையில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கிட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், நீலகிரி மாவட்ட எஸ்.பி.மறுப்புத் தெரிவித்துள்ளார்.

உதகையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், உதகை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தியதுடன், சிறுமியை தனியார் காப்பகத்தில் தங்கவைத்தனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை தொடர்பாக கோத்தகிரிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஒரு பெண் காவலர், அந்தசிறுமியை கைவிலங்குடன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றதாக சர்ச்சை எழுந்தது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் காவல் துறையினரை குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்ட சிறுமியும், போலீஸார் தன்னை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதாக வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக சிறுமியின் தாயார்,எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்குமூலம் அளிப்பதற்காக நீதிமன்றத்துக்கு சிறுமியை விலங்கிட்டு அழைத்துச் சென்றது கண்டிக்கத்தக்கது. மேலும், சிறுமிமற்றும் அவரது தாயை காவல் துறை அதிகாரி மிரட்டியதுடன், பொய் புகார் அளித்ததாக சிறுமியிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீலகிரி எஸ்.பி.ப.சுந்தரவடிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 16-ம் தேதி சிறுமியின் தாயார் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில், கோத்தகிரி நீதிமன்றத்துக்கு தனது மகளை அழைத்துச் சென்றபோது அவருக்கு கைவிலங்கு போடப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக உதகை டிஎஸ்பி யசோதா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டேன். சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, கைவிலங்கு போடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

வழக்கமாக, உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றுத்தான், குற்றவாளிகளை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்ல முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு கைவிலங்குபோடப்படாது. இந்த விவகாரத்தில் சிறுமி மாற்றி மாற்றிப் பேசுகிறார். இது தொடர்பான கண்காணிப்புக் கேமரா வீடியோ பதிவுகளை சோதனை செய்துவிட்டோம். அதில், சிறுமிக்கு கைவிலங்கு போடவில்லை என்பது உறுதியாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x