Published : 23 Nov 2023 08:59 AM
Last Updated : 23 Nov 2023 08:59 AM

மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பண மோசடி - 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, ரூ.46 லட்சம் அபராதம்

7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட யேசுதாஸ், தேவி, கிரிஜா

சென்னை: குறைந்த வட்டிக்குக் கடன் தருவதாகக்கூறி மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் அறக்கட்டளை நிர்வாகி உட்பட 2 பெண்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.46 லட்சம் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி 5-வது மெயின் ரோட்டில் ஆப்ரோ டிரஸ்ட் மற்றும் ஐபிஇஇ பவுண்டேஷன் என்ற பெயர்களில் அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்துள்ளன. இவற்றின் தலைவரான ஐ.பி.யேசுதாஸ், அதன் செயலாளரான எண்ணூரைச் சேர்ந்த எஸ்.தேவி மற்றும்ஏஜெண்டான செயல்பட்ட குறிஞ்சிப்பாடி எஸ்.கிரிஜா ஆகியோர் கூட்டு சேர்ந்து கடந்த 2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் படிப்பறிவு இல்லாத ஏழ்மை நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் தங்களது நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்ந்தால் 50 பைசா வட்டிக்குக் கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

பின்னர் ரூ.1 லட்சம் கடனுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600, வைப்பீடு தொகையாக ரூ.5 ஆயிரத்து 600, ரூ.50 ஆயிரம் கடனுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600, வைப்பீடு தொகையாக ரூ.4 ஆயிரத்து 600 என மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பணம் வசூலித்துள்ளனர். ஓய்வூதியம் வழங்குவதாகக் கூறி 547 நபர்களிடமிருந்து தலா ரூ.1,500 வசூலித்துள்ளனர். இதன்மூலம் இவர்கள் பொதுமக்களிடம் மொத்தம் ரூ.37.34 லட்சம் வசூலித்து, ஏமாற்றியதாக ரமா என்பவர் சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் கு.மீனா இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினார். அதன்படி சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகள் மற்றும் யேசுதாஸ், தேவி, கிரிஜா ஆகிய மூவர் மீதும் போலீஸார் இதச 406, 409, 120(பி), 420 ஆகிய பிரிவுகளின் கீழ் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக இறுதி குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பெருநகர தலைமைகுற்றவியல் நடுவர் என்.கோதண்டராஜ் முன்பாக நடந்தது. பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சார்பில் அரசு சிறப்புக்குற்றவியல் வழக்கறிஞர் மோகன்மாரி ஆஜராகி வாதிட்டார்.

அதையடுத்து இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி என்.கோதண்டராஜ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு அரசு தரப்பில் சரிவர நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி, ஆப்ரோ டிரஸ்ட் மற்றும் ஐபிஇஇ பவுண்டேஷன் நிறுவனத்துக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்தார். மேலும், யேசுதாஸ், தேவி, கிரிஜா ஆகியோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.14 லட்சம் என மொத்தம் ரூ.46 லட்சத்தை அபராதமாக விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இந்த அபராதத் தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35 லட்சத்து 98 ஆயிரத்து 100-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 பேரும் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x