Published : 13 Nov 2023 02:40 PM
Last Updated : 13 Nov 2023 02:40 PM

தெலங்கானாவில் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ - 8 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நம்பள்ளி பகுதியின் பஜார் கார்டு (Bazaar Guard) பகுதியில் உள்ள கட்டிடத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் பஜார் கார்டு என்பது அதிக எண்ணிக்கையிலான பட்டறைகள், சிறுதொழில் நிறுவனங்கள் கொண்ட மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்புகளைக் கொண்ட பகுதியாகும். இந்த தீ விபத்துக் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஐந்து அடுக்கு கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திங்கள்கிழமை காலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. காலை 9.35 மணிக்கு வந்த தீ விபத்து குறித்த அழைப்பினைத் தொடர்ந்து தீயை அணைக்க 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. முதல்கட்ட விசாரணையின்படி, கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் வைக்கப்பட்டிருந்த சில கெமிக்கல் டிரம்களில் தீப்பிடித்து பரவியது தெரியவந்துள்ளது.

இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீயினால் உண்டாகி பரவிய புகை மற்றும் தீ ஜுவாலைகளால் கட்டிடத்தின் மூன்று, நான்கு, ஐந்தாவது மாடிகளில் வசிப்பவர்கள் சிக்கியுள்ளனர். நாங்கள் இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளோம். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்தனர். இந்த தீ விபத்தினால் கட்டிடத்தின் ஒரு பகுதியும், அதன் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. அந்தக் கட்டிடத்தில் இருந்து தீ மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் அங்கிருந்து கெமிக்கல்கள் நிறைந்த 12 பேரல்கள் மற்றும் 38 கேன்கள் அப்புறப்படுத்தப்பட்டு கட்டிடத்துக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டன.

இந்தத் தீ விபத்தில் எம்டி.ஆசாத் (58), ரெகானா சுல்தானா (50), ஃபைஷா சமீன் (26), தாகூரா ஃபாரீன் (35), தூபா (6), தரூபா( 13), எம்டி. ஜாகீர் உசைன் (66), ஹசிப் உர் ரஹ்மான் (32) மற்றும் நிகாத் சுல்தானா (55) ஆகிய 8 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் இதுவரை 16 பேரை மீட்டுள்ளனர். மத்திய அமைச்சரும், தெலங்கானா பாஜக தலைவருமான கிஷன் ரெட்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x