Published : 06 Nov 2023 06:15 AM
Last Updated : 06 Nov 2023 06:15 AM

சென்னை | ஆன்லைன் மூலம் ரூ.3.9 லட்சம் மோசடி: உ.பி.யைச் சேர்ந்த தம்பதி கைது

வினய் சக்சேனா, விந்தி

சென்னை: ஆன்லைன் மூலம் ரூ.3.9 லட்சம் பெற்று மோசடி செய்ததாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தங்களது நிறுவனத்தை பிரபலபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. முதல் கட்டமாக தங்கள் நிறுவனம் பெயரில் விளம்பரம் செய்ய முடிவு செய்தது.

இதற்காக குடைகளை வாங்கி அதில், தங்கள் நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்து பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. இதற்காக 1,800 குடைகளை வாங்க ஆன்லைன்னில் முன்பதிவு செய்தனர். இதற்கு கட்டணமாக ரூ.3.9 லட்சம் அனுப்பி வைத்தனர். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளனர்.

மேலும், பொருட்களை அனுப்பி வைத்ததுபோல் போலி பில்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர். அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனத்தினர் இதுகுறித்து சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் மோசடிக்காரர்கள் உத்தரபிரதேசத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்ததனிப்படை போலீஸார் ரூ.3.9 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அம்மாநிலத்தைச் சேர்ந்தவினய் சக்சேனா (28), அவரது மனைவிவிந்தி (29) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லேப்டாப், 3 செல்போன், ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று முன்தினம் சென்னை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x