Published : 04 Nov 2023 06:03 AM
Last Updated : 04 Nov 2023 06:03 AM
கோவை: கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு கார் வெடித்ததில், அதை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஏற்கெனவே 13 பேரை கைது செய்துள்ளனர்.தொடர் விசாரணையில், போத்தனூர் திருமலை நகர் அருகேயுள்ள மதீனா அவென்யூ பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் தாஹா நசீர்(27) என்பவருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் அவரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: கார் வெடிப்பில் உயிரிழந்த முபின், இவ்வழக்கில் முன்னரே கைது செய்யப்பட்ட முகமது தவுபீக், தற்போது கைது செய்யப்பட்ட தாஹா நசீர் ஆகியோர் கார் வெடிப்பு சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்னர், கோட்டைமேடு பகுதியில் உள்ள முபினின் வீட்டில் சந்தித்துப் பேசி, சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
வெடி மருந்து நிரப்பப்பட்டகாரை முபின் ஓட்டிச் சென்றதில், தாஹா நசீருக்கும், தவுபீக்குக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரியவந்தது. தாஹா நசீரின் பொருட்களை ஆய்வு செய்தபோது, ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு வாசகங்கள் அடங்கிய தகவல்களை அவர் பதிவிறக்கம் செய்திருந்ததும், கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தனது டிஜிட்டல் பொருட்களில் இருந்ததகவல்களை, சிறப்பு செயலிகளைப் பயன்படுத்தி அழித்ததும் தெரியவந்தது.
மேலும், கைதான தாஹா நசீரும், முகமது தவுபீக்கும் சிறு வயதிலிருந்தே நெருங்கியநண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT