Published : 31 Oct 2023 08:04 PM
Last Updated : 31 Oct 2023 08:04 PM
மதுரை: கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், அவர் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித். இவர் சமீபத்தில் காரைக்குடி காவல் நிலையத்திற்கு ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சென்றார். அப்போது அறிவழகன் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் மருதுசேனை தலைவர் ஆதி நாராயணன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். ஆதிநாராயணன் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். அவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் மனுதாரர் மீது 3 கொலை வழக்கு உட்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, “மனுதாரர் கொலை செய்து கொண்டே இருப்பார். அவருக்கு போலிஸ் பாதுகாப்பு அளித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தன் கையே தனக்கு உதவி என மனுதாரர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.
கொலையும் செய்வார்கள், போலீஸ் பாதுகாப்பும் கேட்பார்கள். இதை நீதிமன்றம் எப்படி ஏற்றுக்கொள்ளும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. அதுதான் நடக்கும். தனக்கு தேவை என்றால் ஹாலிவுட், பாலிவுட் படங்களில் வருவது போல தங்களின் பாதுகாப்புக்கு பவுன்சர்கள் அமைத்துக்கொள்வது போல் அமைத்துக்கொள்ளட்டும். இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றார்.
இதையடுத்து ஆதிநாராயணன் தரப்பு வழக்கறிஞர், மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT