Published : 19 Oct 2023 04:00 AM
Last Updated : 19 Oct 2023 04:00 AM

கோவை அருகே வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது: 105 பவுன் நகைகள் பறிமுதல்

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் திருட பயன் படுத்தப்பட்ட பொருட்கள்.

கோவை: கோவை அருகே, வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் வினோபாரதி (30). இவர், கடந்த 10-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது, வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 70 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். அதேபோல, மின் வாரிய உதவிப் பொறியாளர் சுரேந்திரன் என்பவரது வீட்டிலும் 42 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, டிஎஸ்பி நமச்சிவாயம் மேற்பார்வையில் பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் புதுப்பாளையம் சாலையில் நின்ற ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது, அவர் மதுரை மாவட்டம் கருப்பராயன் ஊரணியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற சின்ன கருப்புசாமி (26) என்பதும், தந்தை பழனிசாமியுடன் (47) சேர்ந்து வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.3.30 லட்சம் மதிப்புள்ள கேமரா, 105 பவுன் நகைகள் மற்றும் திருட்டில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட கையுறை, போலி சாவிகள், கட்டிங் பிளேடு, ஸ்கூரு டிரைவர் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்த டிஎஸ்பி நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோதரன், 2 உதவி ஆய்வாளர்கள், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 3 காவலர்கள் ஆகியோருக்கு டிஐஜி சரவண சுந்தர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x