Published : 19 Oct 2023 06:35 AM
Last Updated : 19 Oct 2023 06:35 AM
சென்னை: ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக மருமகள் அளித்த புகாரில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த பெண் பாரதி (45). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு அளித்தார். அதில், கூறியிருந்ததாவது:
எனது கணவர் விஜயகுமார் பெயரில் பெரவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்பில் நிலத்துடன் கூடிய வீடு இருந்தது. 2007-ல் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவர் இறந்துவிட்டார்.
போலி வாரிசு சான்றிதழ்: இந்நிலையில், விஜயகுமாரின் தந்தையும், எனது மாமனாருமான மாதவரத்தில் வசிக்கும் செங்கோடன் (71), மகனான விஜயகுமாருக்கு திருமணமாகவில்லை என கூறி போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து, போலியான ஆவணங்கள் பதிவு செய்து அவர் பெயரில் இருந்த நிலத்தை மோசடி செய்து அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே, அவர் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பாரதி தெரிவித்திருந்த புகார் உண்மை என தெரியவந்தது.
இதையடுத்து, செங்கோடன், அவரது கூட்டாளி கானாத்தூர் லோகநாதன் (51) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT