Published : 13 Oct 2023 04:00 AM
Last Updated : 13 Oct 2023 04:00 AM
சிவகங்கை: மானாமதுரையில் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்த தால் உயிரிழந்ததாக உறவினர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.
மானாமதுரை அருகே அதி கரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பிரசாந்த் (29). இவர் சிவகங்கையில் உள்ள தொண்டி சாலையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். செப். 9-ம் தேதி மானாமதுரையில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு பிரசாந்த் சென்றார்.
மானாமதுரையில் கீழ்மேல்குடி சாலையில் மது போதையில் நின்று கொண்டிருந்த அவரை சிலர் திருடன் என நினைத்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் மதுபோதையில் இருந்ததால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல், உறவினர் ஒருவரிடம் போலீஸார்ஒப்படைத்தனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த பிரசாந்த், மனைவியிடம் நடந்த சம்பவத்தை கூறவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு வயிற்று வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதே நேரம் பிரசாந்த்தை மானாமதுரையில் கீழ்மேல்குடி சாலையில் மரத்தில் கயிற்றால் கட்டி வைத்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த உறவினர்கள், ‘பிரசாந்தை அடித்ததால்தான் இறந்துவிட்டார். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிவகங்கையில் உள்ள மருத்துவர்களை வைத்து பிரேத பரிசோதனை செய்தால், உண்மை மறைக்கப்படும்.
இதனால் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தினர். இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சிவகங்கை மற்றும் மானாமதுரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT