Published : 12 Oct 2023 08:12 PM
Last Updated : 12 Oct 2023 08:12 PM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே இருதய பாதிப்பால் குழந்தை உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து தாய், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜலபதி (25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி வந்தார். அப்போது, இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் தெங்கபட்டிணம் அருகே உள்ள கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சம்ரோபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்கிற பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்படுத்து காதலாக மாறியது.
பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி அபிசல்மியாவை, ஜலபதி காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள் கடந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டால், பல்வேறு இடங்களில் சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை இறந்தது. குழந்தை உயிரிழந்ததால், மிகவும் மனஅழுத்துடன் காணப்பட்ட அபிசால்மியா, கடந்த 6-ம் தேதி, தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பர்கூர் டிஎஸ்பி மனோகரன் விசாரணை நடத்தி வந்தார்.
இதில் தற்கொலை செய்வதற்கு முன்பு அபிசால்மியா எழுதிய கடிதத்தில், “என் சாவுக்கு யாருமே காரணமில்லை. முழுக்க முழுக்க நான்தான் காரணம். எல்லாருமே என்னை நல்லா தான் பார்த்துகிட்டாங்க. ஆனாலும் எனக்கு என் பாப்பாவ பார்க்கணும். அவ கூடவே இருக்கனும்னு தோனுது. என்ன மன்னிசிருங்க. என் சாம்பல என் ஊரு (கன்னியாகுமரி) கடல்ல கரைச்சிடுங்க. அது தான் என் கடைசி ஆசை.
யாருமே எந்த விஷயத்திலயும் என்னை நினைக்க வேண்டாம். அப்படியே மறந்துடுங்க. எந்த சடங்கு, சம்பிரதாயமும் பண்ண வேண்டாம். வந்தேன், போய்ட்டேன், அவ்வளவுதான். என் அண்ணன, அப்பாவ கடைசி வர பாக்காமலேயே போறேன் அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படிக்கு அபிசல்மியா” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அபிசால்மியாவின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்கு பின், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, கன்னியகுமரியில் உள்ள வீட்டிற்கு எடுத்து சென்று அவர்கள் அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், தனது குழந்தையும், மனைவி உயிரிழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஜலபதியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், ஜலபதி தற்கொலைக்கு முன்பாக எழுதிய உருக்கமாக 4 பக்கத்தில் கடிதம் எழுதி உள்ளார். அதில், “என்னால் என் மனைவி அபியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனக்கு என்னுடைய அபி, பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு. அவள் எங்கு சென்றாலோ அங்கு நானும் செல்கிறேன். லவ் யூ ஷோ மச் அபி. என்னை எல்லோரும் மன்னித்து விடுங்க அப்பா பிளீஸ் பா. அபியை எங்கு அடக்கம் செய்தார்களோ அங்கு என்னையும் அடக்கம் செய்யுங்கள். இதுதான் என்னுடைய கடைசி ஆசை. எனக்கு எந்த ஒரு சடங்கு செய்ய வேண்டாம். நீங்கள் பார்த்து பத்திரமாய் இருங்கள்.
செம்பா கண்ணுகுட்டியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். சங்கி நீ நன்றாக இருப்பாய். என்னுடைய அப்பா அம்மா மாதிரி இந்த உலகில் யாருக்கும் அமையாது. என்னுடைய அபி எனக்கு சாமி ஷோ நான் என்னுடைய சாமியிடம் செல்கிறேன். அபி இல்லாத உலகம் எனக்கு வேண்டாம். இது என்னுடைய சுயமான முடிவு. அம்மா உன்னிடம் ஒரு பொய் சொல்லிட்டேன். நைட் அபி என்னை கூப்பிட்டா. நீயும் வா நான் பாப்பாவிடம் தான் இருக்கிறேன் என்று. எங்களுக்கு பயமாக இருக்கு என்று. எனக்கு இறப்பதற்கு பயமாய் தான் இருக்கு. அவள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை. அதனால் தான் இந்த முடிவு. லவ் அண்டு லவ் ஒன்லி. அபிசல்மியா, ஜலபதி, பிரணிதா. திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே” என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் குழந்தை, தாய், தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், போச்சம்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT