Published : 11 Oct 2023 04:00 AM
Last Updated : 11 Oct 2023 04:00 AM
திருப்பூர்: காங்கயத்தில் மைக்ரோ பைனான்ஸ் குழுக் கடன், தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: காங்கயம் - திருப்பூர் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில், மைக்ரோ பைனான்ஸ் குழுக் கடன் மற்றும் தனி நபர் கடன் வழங்கப்படுவதாக விளம்பரப்படுத்தினர். கடன் பெறுவதற்கு காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும் எனவும், ஒரு குழுவில் 10 பேர் இருந்தால் நபர் ஒருவர் ரூ.1,340 வீதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதை நம்பி, சுமார் 200 குழுக்களாக கடன் பெறுவதற்காக காப்பீட்டுத் தொகை செலுத்தினோம். இதன் மூலம் தோராயமாக ரூ.26 லட்சத்துக்கு மேல் வசூலிக்கப்பட்டது. கடன் தொகைக்கு ஏற்ப குறைந்த பட்சம் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.70 ஆயிரம் வரை காப்பீட்டு தொகையாக வசூலித்தனர். காப்பீட்டுத் தொகை கொடுத்தவர்களுக்கு, அவர்கள் கேட்ட கடன் தொகைக்கு காசோலைகள் வழங்கினர்.
ஆனால் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, வங்கியில் தனியார் நிறுவனத்தின் கணக்கில் பணம் இல்லை என தெரியவந்தது. நிதி நிறுவனத்துக்கு வந்து பார்த்தபோது, அங்கு பொறுப்பில் இருந்த மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் யாரும் இல்லை. அலுவலர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப் பட்டிருந்தன.
தகவலின் பேரில், காங்கயம் போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT