Published : 10 Oct 2023 04:02 AM
Last Updated : 10 Oct 2023 04:02 AM
கோவை: திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தம்பதியை போலீஸார் நேற்று கோவையில் கைது செய்தனர். விசாரணையின் போது உடல் நலக்குறைவால் பெண் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளபுரத்தை சேர்ந்த முத்து ராஜ் என்பவரது ஓன்றரை வயது குழந்தை ஹரிஷ். முத்துராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்ற போது குழந்தை ஹரிஷ் கடத்தப் பட்டார். இது குறித்து திருச்செந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குழந்தையை ஒரு தம்பதி திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி போலீஸாருக்கு கிடைத்தது. விசாரணையில் குழந்தையை கடத்தியது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பாண்டியன் மற்றும் அவரது மனைவி திலகவதி என்பது தெரியவந்தது. இருவரும் கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள முட்டத்துவயல் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
நேற்று அப்பகுதிக்கு சென்ற ஆலாந்துறை போலீஸார் தம்பதியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டது அவர்கள்தான் என்பது உறுதியானது. குழந்தையை சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்த தென்னம் பிள்ளையூர் கிராமத்தில் திலகவதியின் தாயார் பாக்கிய லட்சுமியிடம் கொடுத்து விட்டு பூண்டி கோயிலுக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து, தம்பதியை ஆலாந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்து போலீஸார் வந்தனர். பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு சேலம் கிளம்ப திட்டமிட்ட போது, காவல் நிலையத்திலேயே திலகவதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக பூலுவபட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் வழியிலேயே திலகவதி உயிரிழந்து விட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் உயிரிழந்தது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திலகவதியின் மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே தனிப்படை போலீசார் சேலத்தில் இருந்த குழந்தையை மீட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT