Published : 10 Oct 2023 06:15 AM
Last Updated : 10 Oct 2023 06:15 AM

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை தாக்கிய வழக்கில் சக மாணவர் கைது

சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய வழக்கில் தொடர்புடைய அதே கல்லூரி 3-ம் ஆண்டு மாணவரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (20). இவர் மாநில கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார்.

இவர் கடந்த 5-ம் தேதி பிற்பகலில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறுவதற்காக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் செல்லும் சில மாநில கல்லூரி மாணவர்கள், சத்தியமூர்த்தியிடம் தகராறு செய்தனர்.

அப்போது, சத்திய மூர்த்திக்கும் அந்த நபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஒரு மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்தியமூர்த்தியை தாக்கினார். பின்னர் அந்த மாணவர்கள் தப்பி ஓடினர்.

தலையில் வெட்டுபட்ட சத்தியமூர்த்தி நிலை குலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த பயணிகள், ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீஸார், படுகாயமடைந்த சத்தியமூர்த்தியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருவொற்றியூரைச் சேர்ந்த லிபிஸ் (19) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இது குறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ``மாநில கல்லூரியில் படிக்கும் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மாணவர்கள் இடையே இருந்த ‘ரூட் தல‘ பிரச்சினையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இந்த சம்பவம் நடந்துள்ளது.

கைது செய்யப்பட்ட லிபிஸ் மாநில கல்லூரியில் 3-வது ஆண்டு மாணவர். இதுபோன்ற சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு எதிர்காலத்தை வீண் செய்யாமல், படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தி வருகிறோம்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x