Published : 07 Oct 2023 05:05 PM
Last Updated : 07 Oct 2023 05:05 PM
சென்னை: திமுகவின் அதிகாரபூர்வ ஊடகமான 'முரசொலி' பத்திரிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அதில் ஊடுருவி, பெண்களின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த நிலையில், சைபர் குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் 2 தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்கின்றனர். முரசொலி ஃபேஸ்புக் பக்கத்தில் கைவரிசை காட்டியது யார் என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
’‘முரசொலி’ பொது மேலாளர் எஸ்.ராஜசேகரன் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரில், "அக்டோபர் 4-ஆம் தேதி முதல் எங்கள் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதில் ஆபாசப் படங்களை சில விஷமிகள் பதிவேற்றியுள்ளனர். மேலும், இணைய முடக்கத்தை சரி செய்ய 200 டாலர் பணம் கேட்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் சைபர் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இணையதளங்கள், சமூக வலைதளப் பக்கங்கள் வைத்திருப்போர் பிரத்யேக கடவுச்சொற்களை அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும். இதுபோன்ற ஹேக்கர்கள் இணையத்தை முடக்கிவிட்டு டாலரிலோ அல்லது க்ரிப்டோகரென்சிகளாகவோ பணம் பறிக்க முயற்சி செய்வது தொடர்கிறது. எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இதுபோன்ற புகார்கள் ஏற்கெனவே வந்துள்ளன. ஆனால் யாரும் பணத்தை ஹேக்கர்களிடம் இழந்ததாகப் புகார் கூறவில்லை. சில பிரபலங்கள் தங்கள் புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பியிருப்பதை புகாராகக் கூறியுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT