Published : 04 Oct 2023 07:06 AM
Last Updated : 04 Oct 2023 07:06 AM

குழந்தை திருமணங்களுக்கு காரணமான 1,000-க்கும் மேற்பட்டோர் அசாமில் கைது: 5 ஆண்டுகளில் 3,319 பேர் மீது வழக்கு பதிவு

குவஹாட்டி: குழந்தை திருமணங்களுக்கு காரணமான 1,039 ஆண்களை அசாம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சட்டப்படியான திருமண வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது அசாம் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் சட்டவிரோதமாக திருமணங்கள் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், சட்டவிரோதமாக குழந்தை திருமணங்களை நடத்தி வைத்த பெற்றோர், மத குருக்கள் என நூற்றுக் கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை திருமணங்களுக்கு காரணமான 3,907 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3,319 பேர் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அசாம் சட்டப்பேரவையில் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த மாதம் 11-ம் தேதி தெரிவித்தார்.

இந்நிலையில், குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக வந்த புகார்களின் அடிப்படையில் நேற்று காலை 1,039 பேரை அசாம் போலீஸார் கைது செய்தனர்.

கைது அதிகரிக்கும்: இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘குழந்தை திருமணத்துக்கு காரணமானவர்கள் மீது மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x