Published : 02 Oct 2023 07:35 AM
Last Updated : 02 Oct 2023 07:35 AM
சென்னை: தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியைத் தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள வழிப்பறி கும்பலைத் தேடி வருகின்றனர்.
தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் பாபு (47). இவர், அதே பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் தெருவில் ரங்கநாத் ஸ்டீல் என்ற பெயரில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில், வசூல் பணம் ரூ.8 லட்சத்துடன் மண்ணடி பகுதியில் பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வாகனத்தில் வந்து மோதினர்: அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல் பிரகாஷ் பாபு வாகனம் மீது மோதி அவரை கீழே தள்ளியது. மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியது. பின்னர், கத்தி முனையில் அவரிடமிருந்த ரூ.8 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பியது.
இந்த திடீர் சம்பவத்தால் பிரகாஷ் பாபு நிலை குலைந்துபோனார். அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர், அவர் வழிப்பறி தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். தலைமறைவான வழிப்பறி கும்பலைத் போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT