Published : 27 Sep 2023 09:23 PM
Last Updated : 27 Sep 2023 09:23 PM
மேட்டூர்: மேட்டூர் அருகே நங்கவள்ளி பேக்கரியில் பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்கை சாப்பிட்ட 2 வயது சிறுமி உள்பட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அடுத்த கரட்டுபட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (31). கூலி தொழிலாளியான இவரது 2 வயது பெண் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக, மாரிமுத்துவின் உறவினர் ஒருவர் நங்கவள்ளியில் உள்ள பேக்கரியில் பிறந்தநாள் கேக் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிறந்தநாளை கொண்டாடிய பிறகு, முதலில் 2 வயது சிறுமி உள்பட 6 சிறுவர்கள் கேக் சாப்பிட்டனர். பின்னர், வீட்டில் இருந்த பெற்றோர், உறவினர்கள் 6 பேர் கேக் சாப்பிட்டனர்.
இதனிடையே, திடீரென அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நங்கவள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுருபரன் பேக்கரில் இருந்த கேக், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பேக்கரில் கெட்டுp போயிருந்த கேக், பிரட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த அழித்தார். பேக்கரில் இருந்து கேக், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட 8 தின்பண்டங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவுகள் வந்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT