Last Updated : 24 Sep, 2023 04:19 PM

 

Published : 24 Sep 2023 04:19 PM
Last Updated : 24 Sep 2023 04:19 PM

சமூக வலைதளம் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவும் கேரள போலி லாட்டரி!

பணம் பறிக்கும் நோக்கில் மொபைல் போனுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்

குமுளி: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கேரள வியாபாரி களால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு தினசரி மற்றும் பம்பர் லாட்டரி விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. தினசரி லாட்டரியை பொருத்தளவில் தினமும் பிற்பகல் 3 மணிக்கு குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன.

அதற்கான சிறிய பரிசுத் தொகை லாட்டரி முகவர்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. முதல் பரிசுகளைப் பொருத்தளவில் லாட்டரி சீட்டின் உண்மைத்தன்மையை பரிசோதித்து 3 மாதங்களுக்குள் பரிசுத்தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 30 முதல் 40 சதவீதம் வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே இத்தொகை வழங்கப்படுகிறது.

பம்பர் லாட்டரி களை பொருத்தளவில் புத்தாண்டு, ஓணம், கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய பண்டிகைகளின்போது வெளியிடப்படுகிறது. இதில் அதிகபட்சம் ரூ.25 கோடி வரை முதல் பரிசு அறிவிக்கப் படுகிறது. தினசரி லாட்டரிகள் ரூ.40, ரூ.50-க்கும், பம்பர் லாட்டரிகள் ரூ.500 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.

தேனி மாவட்டம் கேரளத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் தொழில், வேலை தொடர்பாக அங்கு சென்று வரும் பலரும் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதேபோல் கேரள மாநில எல்லையில் உள்ள கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் லாட்டரி சீட்டுகளை வாங்குகின்றனர்.

கடந்த ஆண்டு பம்பர் லாட்டரி பரிசை நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பெற்றார். கடந்த 20-ம் தேதி ஓணம் பண்டிகை பம்பர் லாட்டரி முதல் பரிசாக ரூ.25 கோடி கோவையைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு கிடைத்தது. இந்நிலையில் கேரளாவில் உள்ள விற்பனை நிலையங்கள் தங்கள் லாட்டரிகளை ஆன்லைன் மூலம் தமிழகத்தில் அதிகளவில் விற்பனை செய்ய தொடங்கி உள்ளன.

அய்யனார்

இதற்காக சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் தமிழகத்திலும் கேரள லாட்டரி விற்பனை அதிகரித்து வருகிறது. தினசரி லாட்டரியை பொருத்தவரை தபால், கூரியரில் சம்பந்தப்பட்டவருக்கு சென்றடைவதற்குள் முடிவுகள் வெளியாகி விடும்.

ஆகவே, ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் லாட்டரி சீட்டுகளை ஸ்கிரீன் ஷாட் மூலம் புக்கிங் செய்து மொபைல் போனில் அனுப்புகின்றனர். இதில் ஏராளமான போலி லாட்டரி வியாபாரிகளும் தற்போது களத்தில் குதித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இவர்கள் வெளியிடும் விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பலரும் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.

இது குறித்து தேனியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி அய்யனார் கூறியதாவது: போலி லாட்டரி சீட்டுகள் இணையத்தில் அதிகளவில் விற்கப்படுகின்றன. என்னுடைய நண்பருக்கு ரூ.8 லட்சம் விழுந்துள்ளதாகவும், இதற்கு ஜிஎஸ்டி கட்டணமாக ரூ.8 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்றும் மொபைல் போனில் குறுஞ் செய்தி வந்துள்ளது.

ஆர்வத்தில் பணத்தைச் செலுத்தி விட்டார். அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் எனறு கூறினார். போலீஸார் கூறுகையில், தேனி மாவட்ட எல்லைக்குள் லாட்டரி சீட்டு விற்பவர்களை கைது செய்து வருகிறோம். தற்போது இணையத்தில் சமூக வலைதளங்கள் மூலம் தமிழகத்தில் லாட்டரி விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x