Published : 24 Sep 2023 04:02 AM
Last Updated : 24 Sep 2023 04:02 AM

ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி 40 பேரிடம் மோசடி செய்ததாக 2 பேர் கைது

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி 40-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் வழக்கறிஞர் அர்ஜுனர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரில், "ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிலர் போலியான விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

இந்த விளம்பரத்தை நம்பி விண்ணப்பிக்கும் இளம் பெண்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கூகுள் பே மூலம் பணத்தை அனுப்ப வேண்டுமெனக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களை போலீஸார் சேகரித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த செல்போன் எண் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. மேலும், மோசடிக்காரர்கள் கடலூரில் இருந்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கடலூருக்குச் சென்ற தனிப்படை போலீஸார், மோசடி தொடர்பாக சுதாகரன் (26), புகழேந்தி (20) ஆகியோரை திட்டக்குடியில் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பிரபல சினிமா நிறுவனங்களின் ஏஜென்ட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, 2022-ம் ஆண்டு முதல் 40-க்கும் மேற்பட்டோரிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், ஒரு லேப் டாப் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x