Published : 22 Sep 2023 04:02 AM
Last Updated : 22 Sep 2023 04:02 AM

52 பவுன் தங்க நகைகள் மீட்பு: வேலூரில் திருட்டு வழக்கில் வங்கி ஊழியர் சிக்கியது எப்படி?

பறிமுதல் செய்யப்பட்ட 52 பவுன் நகைகள்.

வேலூர்: வேலூரில் ஆசிரியை வீட்டில் நகைகளை திருடியதாக வங்கி ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். திருடிய நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

வேலூர் தொரப்பாடி ராம்சேட் நகரைச் சேர்ந்தவர் தகவல் தொழில்நுட்ப ஊழியர் பாலாஜி (42). இவரது மனைவி மோகனப் பிரியா (40). இவர், மூஞ்சூர்பட்டு அரசினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள், கடந்த 3-ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று மாலையில் வீடு திரும்பினர்.

அப்போது, வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த சுமார் 75 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த அறையில் மர்ம நபர்கள் மிளகாய் பொடியை தூவிச் சென்றிருந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் பாகாயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கில் பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் வங்கி ஊழியர் வெங்கடேசன் (35) என்பவரை காவல் துறையினர் கைது செய்ததுடன், அவர் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிப்பாடி இந்தியன் வங்கி கிளையின் லாக்கரில் மறைத்து வைத்திருந்த 52 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

வெங்கடேசன்

இது தொடர்பாக காவல் துறையினர் கூறும்போது, ‘‘திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியதில் பின் வாசல் வழியாக மர்ம நபர்கள் வந்து சென்றது முதலில் உறுதி செய்யப்பட்டது. பின் வாசலில் இருந்த இரும்பு கேட் சேதமடையாமல் இருந்ததால் தெரிந்த நபர்கள் தான் வீட்டில் திருடியிருக்க கூடும் என உறுதி செய்தோம்.

தொடர் விசாரணையில், வெங்கடேசன் மீது சந்தேகம் இருந்தது. அவர் மட்டுமே பாலாஜியின் வீட்டுக்கு எந்த நேரமும் பின் பக்கம் வழியாக வந்து சென்றுள்ளார். மேலும், திருட்டு சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் காலை 9 மணிக்கு எல்லாம் வீட்டில் இருந்து அண்ணா சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றதாக கூறினார்.

ஆனால், அவர் அன்று காலை 10.30 மணி வரை வீட்டில் இருந்ததை உறுதி செய்தோம். அது தொடர்பாக விசாரித்த போது வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துவிட்டு சென்றதாக கூறினார். அந்த தொட்டியை சென்று பார்த்த போது சுத்தம் செய்ததற்கான எந்த அடையாளமும் இல்லை.

அவர் கூறிய சூப்பர் மார்க்கெட்டின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மிளகாய் பொடி பாட்டில் வாங்கிச் செல்வதை கண்டு பிடித்தோம். அவர்தான் குற்றவாளியாக இருக்கலாம் என்பதை உறுதி செய்துகொண்டோம். அவர், வேலை செய்த இடத்தில் விசாரித்தபோது அவர் மோசடி பேர்வழி என தெரியவந்தது.

வெங்கடேசன், போளூரில் பணியாற்றியபோது பெரும் தொகை ஒன்றை அவரது கணக்கில் மாற்றி முறைகேடு செய்ததை மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்து பணத்தை மீட்டுள்ளனர். அவரை பிடித்து விசாரித்த போது பாலாஜி வீட்டில் நகைகளை திருடி வங்கி லாக்கரில் மறைத்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டார்.

திருடு போனது 75 பவுன் இல்லை 52 பவுன் தங்க நகைகள்தான். அதை பாலாஜியும் உறுதி செய்துவிட்டார். இதையடுத்து, திருட்டு வழக்கில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்’’ என தெரிவித்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாராட்டினார். வெங்கடேசன் மட்டுமே பாலாஜியின் வீட்டுக்கு பின்பக்கம் வழியாக வந்து சென்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x