Published : 21 Sep 2023 04:00 AM
Last Updated : 21 Sep 2023 04:00 AM
நெகமம்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த சமத்துவபுரத்தில் முன் பகுதியில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் பெரியார் சிலை மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றியிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். நெகமம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீர் ஊற்றி கழுவி சிலையை சுத்தம் செய்தனர். இது குறித்து தகவலறிந்து அங்கு திரண்ட திமுக, விடுதலை சிறுத்தை கட்சியினர், பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தலைவர்கள் கண்டனம்: ராமதாஸ்: கோவை மாவட்டம் வடசித்தூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாரின் மார்பளவு சிலையை சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கி.வீரமணி: பெரியார் சிலையை அசிங்கப்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT