Published : 10 Sep 2023 05:09 AM
Last Updated : 10 Sep 2023 05:09 AM

"பிஹார் கைத்துப்பாக்கி" - விருத்தாசலத்தில் திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கின் பின்னணி

இளையராஜா

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே திமுக பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரைச் சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் மகன் இளையராஜா(45). திமுக பிரமுகரான இவர் நேற்று முன்தினம் மாலை ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டார். காயமடைந்த இளையராஜா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மணவாளநல்லூரைச் சேர்ந்த ஆற்றலரசன், புகழேந்தி ராஜா, சூர்யா, வெங்கடேசன், சதீஷ், விஜயகுமார் ஆகியோரைக் கைதுசெய்தனர். இவர்களில் விஜயகுமார் தப்பியோட முயன்றபோது, கீழே விழுந்து கை, காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியால் சுடப்பட்ட இளையராஜவுக்கும், அதே பகுதியைச்சேர்ந்த ராஜசேகர் மகன்களான புகழேந்தி ராஜா மற்றும் ஆற்றலரசன் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு இளையராஜாவின் போஸ்டரில் காலணி மாலை அணிவிக்கப்பட்ட சம்பவத்தால், இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் புகழேந்தி ராஜாதாக்கப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் வகையில் இளையராஜா துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

பிஹார் துப்பாக்கிகள் பறிமுதல்: வழக்கமாக அரிவாள், இரும்புக் கம்பியால் தாக்கிக் கொண்டிருந்தவர்கள், தற்போது துப்பாக்கியைக் கையில் எடுத்துள்ளது கடலூர் மாவட்ட போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் அதிகாரிகள் தரப்பில் கூறியபோது, "பிஹார் மாநிலத்திலிருந்து வந்தவர்களிடம் கைத்துப்பாக்கியை வாங்கியதாக, கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.

வட மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக தமிழகம் வருவோர், துப்பாக்கிகளையும் கள்ளத்தனமாக விற்பனை செய்துவருவது தெரியவந்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் இதுபோன்று துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x