Published : 10 Sep 2023 05:14 AM
Last Updated : 10 Sep 2023 05:14 AM
தூத்துக்குடி: மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம், தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு அளித்த அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகள் போலியாக ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த வினோதினி என்பவர், தனது பெயரில் வேறு சில நபர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்டசைபர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (பொ) கோடிலிங்கம், காவல்ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த ராயன்(38), வெங்கடேஸ்வரா என்டர்பிரைசஸ் என்ற பெயரில் சிம் கார்டு டீலர்ஷிப் கடை நடத்தி வந்தார். இவர் 620 சிம் கார்டுகளை போலியாக ஆக்டிவேஷன் செய்துள்ளார். தனது கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வருவோரின் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி இந்த மோசடியில் அவர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ராயன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 செல்போன் மற்றும் 3 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவரைபோல மேலும் சிலர் செல்போன் டீலர்ஷிப் என்ற பெயரில், பொதுமக்களின் ஆதார் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, போலி முகவரியில் சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்துள்ளதும், பல சட்டவிரோதச் செயல்களுக்கு அந்த சிம்கார்டுகளை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது என்று தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.
கண்டறிவது எப்படி?: "மத்திய அரசின் https://tafcop.sancharsaathi.gov.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்களைப் பதிவு செய்து, தங்கள் பெயரில் எத்தனை போலியான செல்போன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ளலாம். தங்களுக்கு தெரியாமல் கூடுதல் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால், அந்த இணையதளம் மூலமே உடனடியாக அந்த செல்போன் எண்களை செயலிழக்கச் செய்ய முடியும்.
ஜெராக்ஸ் எடுக்க கடைகளுக்குச் செல்லும்போது, கடைக்காரர்களுக்கு வாட்ஸ்அப் மூலமோ, இமெயில் மூலமோ ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பினால், பிரின்ட் எடுத்த பின்னர், அந்த ஆவணங்களை அவர்கள் அழித்து விட்டனரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்று தூத்துக்குடி எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT